Tuesday, March 22, 2011

அவள் அப்படித்தான்-என் பார்வையில்



தமிழகத்தில் செயற்கைகோள் தொலைகாட்சிகளில் நாடகங்கள் பிரபலமாகும் வரை தமிழ் திரையுலகமே பெண்களால்தான் வாழ்ந்து கொண்டிருந்தது. சுவரொட்டிகளில் "தாய்க்குலம் போற்றும்" "தாய்மார்கள் பேராதரவுடன்" என்றுதான் விளம்பரமே செய்வார்கள். அந்த அளவுக்கு பெண்களை நோக்கிதான் படங்கள் தயாரிக்கப்பட்டன.ஆனால், பெண்களுக்கான,பெண்களைப்பற்றிய படம் என்று பார்த்தால் மிக அரிதாகவே உள்ளது.ஏன்?இதுவரை வந்த பெண் இயக்குனர்கள் கூட பெண்கள் மீதான சமூகப் பார்வையை பதிவு செய்ததில்லை.

1978ல் வெளிவந்த "அவள் அப்படித்தான்" என்ற திரைப்படம் பெண்கள் மீதான சமூகப் பார்வையை அழுத்தமாக பதிவு செய்தது. ஆனால்,அந்த படம் புறக்கணிக்கப் பட்டது.ரஜினி,கமல்,ஸ்ரீப்ரியா என்று முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தும் வெற்றியை தரவில்லை. பெண்கள் இந்தப் படத்தை கொண்டாடியிருந்தால், இந்தப் படம் பிரபலமாகி இருக்கும். ஒரு படம் வெற்றியடைந்தால், அதுபோல் கதையுள்ள நிறைய படம் வருகின்ற சூழலில் ,இது போன்ற சமூகப் பார்வை கொண்ட படங்கள் வந்து பெண்களைப் பற்றி ஆண்கள் புரிந்துகொள்ள சந்தர்ப்பங்கள் வாய்த்திருக்கும்.என்பது என் எண்ணம். 33 வருடங்களுக்கு முன்னாள் வந்த இத்திரைப்படம் இன்றைய சூழலுக்கும் வெகுவாகப் பொருந்துகிறது .சமூகத்தில் இன்று வரை பெண்கள் நிலை மாறாமல் இருப்பதை இது காட்டுகிறது .




அவள் அப்படித்தான் கதை

அருண்(கமல்) ஆவணப் படங்கள் எடுப்பதில் ஆர்வம் உள்ளவன்.சமுதாயத்தில் பெண்களின் நிலை பற்றிய"முழு நிலவில் பாதி" என்ற ஆவணப் படத்தின் மாதிரியை, விளம்பர படங்கள் எடுக்கும் நிறுவனத்தை நடத்தும் தன நண்பனுக்கு(ரஜினி ) போட்டு காண்பிக்கிறான்.அங்கு மஞ்சு (ஸ்ரீப்ரியா) என்ற பெண்ணை கலை இயக்குனர் என்று சொல்லி நண்பன் அறிமுகப்படுத்துகிறான்.தான் எடுக்கும் ஆவணப் படத்திற்கு உதவுமாறு கேட்கிறான். அவளும் சரி என்று கூறுகிறாள். போகப்போக அவளின் குதர்க்கமான பேச்சும்,ஆண்களின் மீதான வெறுப்பும் அவனை யோசிக்க வைக்கிறது.பின்பு அவளின் மூலமாகவே அவளின் கடந்த கால வாழ்க்கை அறிகிறான்.அவள் தாயின் கள்ளக் காதல், பின்பு கல்லூரியில் படிக்கும்போது காதலித்தவன் ஏமாற்றியது,பின்பு வந்த காதலனும் அனுபவித்துவிட்டு ஏமாற்றியது.அதனால் ஆண்கள் மீதான வெறுப்பை அவன் அறிகிறான் அனுதாபம் கொள்கிறான். காதல் பிறக்கிறது அதை அவளிடம் கூறும்போது அவள் அதை நிராகரிக்கிறாள். வெறுப்புற்று திரும்புகிறான். பின்பு அவளுக்கும் காதல் பிறக்கிறது. ஆனால்,அதை கூறுவதற்குள் அவனின் பெற்றோர் நிச்சயித்த பெண்ணை அவன் திருமணம் செய்து கொள்கிறான்.மூன்று முறை இறந்த அவள் மறுபடியும் இறக்கிறாள் மீண்டும் பிறப்பாள் இறப்பாள் அவள் அப்படித்தான்..என்கிறது கதை.கதாநாயகிகளை பத்தினி தெய்வங்களாய் காட்டிகொண்டிருந்த காலகட்டத்தில் இருவரை காதலித்து ஒருவனிடம் கற்பிழந்து,மீண்டும் ஒருவனை காதலிக்க நினைக்கும் பெண் ,கள்ளக்காதல் புரியும் பெண்ணின் மகள். இது போல கதை புதுமையிலும் புதுமை.




இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியாவின் பாத்திரம் மிக முக்கியமானது, அவரைத்தவிர இந்தப் பாத்திரத்திற்கு வேறு யாரையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை அவ்வளவு கச்சிதம். போலி வேடதாரிகளை கண்டு சீறுவது ,சமூக சேவகியை பேட்டி காணும்போது அவர் "மேக்கப் போட்டுக்கணுமா?" என்று கேக்கும்போது "போட்டுக்கணும் நீங்க வழக்கமா போட்டுக்குவீங்களே சொசைட்டி மேக்கப் அது போதும்" என்று கூறுவது, சிவச்சந்திரன் காதலித்து படுக்கையை பகிர்ந்து கொண்டு பின் தங்கச்சி மாதிரி என்று சொன்னடவுடன் அதிர்ந்து போவது, கமல் திருமணம் முடித்து வரும் போது அவர் மனைவியிடம் "பெண் சுதந்திரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்றதும் "எனக்கு அது பற்றி தெரியாதே!"என்று வெகுளியாய் உரைக்கும் போது "அதனால் தான் நீ சந்தோசமாய் இருக்கிறாய்"என்று கூறும் போதும் வசனமும், நடிப்பும் மிகப் பிரமாதம்.

கமலுக்கு இதில் ஜென்டில்மென் கதாபாத்திரம், பெண்ணுரிமை பேசுவதும் ,கதாநாயகி கதை கேட்டு அனுதாபம் கொள்வதும், பின் காதல் கொள்வதும் என்று அவர் பணியை மிக சிறப்பாக செய்துள்ளார்.



நெற்றி நிறைய விபூதி கையில் மதுக்கிண்ணம கொண்ட ஆணாதிக்கவாதி ரஜினியின் கதா பாத்திரம்.பெண்கள் சொந்தக் காலில் நிற்க கூடாது ,பெண்கள் போகப்பொருள் ,அவர்கள் முன்னேற்றம் தவறு என்பவர். இவரைப் போல் இன்றும் நாம் நம்மில் நிறைய பேரைக் காணலாம்.

இசை இளைய ராஜா பாடல்கள் அத்தனையும் முத்துக்கள்.உறவுகள் தொடர்கதை பாடல் எவ்வளவு கேட்டாலும் சலிக்காத பாடல் முற்றிலும் பியானோ வை மட்டுமே வைத்து இசைத்த புதுமையான பாடல் .பன்னீர் புஷ்பங்களே என்ற பாடலை முதன் முறையாக கமலஹாசன் சொந்த குரலில் பாடியது.

இந்தப் படத்தின் இயக்குனர் ருத்ரையா. தயாரிப்பும் இவரே.திரைப் படக் கல்லூரியிலிருந்து வந்தவர். மனித உணர்வுகளை வைத்து அற்புதமாக ஒரு காவியமே படைத்துள்ளார்.தீர்வு சொல்லாமல், கருத்து சொல்லாமல். பார்வையாளனை சிந்திக்க வைத்திருக்கும் பாங்கு ஒன்றே போதும் இவரை உயரத்தில் வைக்க.இவரை தமிழ் சினிமா கண்டு கொள்ளாமல் விட்டது.மிகப் பெரிய கொடுமை.இது தமிழ் சினிமாவின் மிக முக்கியாமானதொரு படம். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் .







நண்பர்களே! என் எழுத்து பிடித்திருந்தால் ஓட்டும்,பின்னூட்டமும் இட்டு எனக்கு ஆதரவு தாருங்கள்.நன்றி!

சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

geethappriyan said...

நண்பரே,
மிகவும் அனுபவைத்து எழுதியிருக்கிறீர்கள்,படத்தை மீண்டும் பார்க்கவேண்டும்.
//..என்கிறது கதை.கதாநாயகிகளை பத்தினி தெய்வங்களாய் காட்டிகொண்டிருந்த காலகட்டத்தில் இருவரை காதலித்து ஒருவனிடம் கற்பிழந்து,மீண்டும் ஒருவனை காதலிக்க நினைக்கும் பெண் ,கள்ளக்காதல் புரியும் பெண்ணின் மகள். இது போல கதை புதுமையிலும் புதுமை.//
மிகவும் உண்மை.இதன் நோக்கம் முழுக்க முழுக்க காலம் காலமாக எண்ணெய் ஊற்றி வளர்த்துவரும் பெண்ணடிமைத்தனம் தான்.இந்த மனநிலையால் தான் பெண்களின் மறுமணம் கேலிக்குரியதாகிவிட்டது.கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே என்னும் நிலையை உண்டுபண்ணிவிட்டனர்.நல்ல வரிகள்.

தமிழ் உதயம் said...

அவள் அப்படி தான் - நிச்சயம் தோல்வி படமல்ல. தமிழ் சினிமாவின் மிக சிறந்த படங்களுள் அதிவும் ஒன்று.

Anonymous said...

தோல்வி படமல்ல, நிச்சியம் வெற்றி படம் தான்...அந்த கலைஞனுக்கு...ஒரு நல்ல சினிமாவின் வெற்றி என்பது காலம் கடந்து நிற்பதுதான். மிக அதிகவசூலை அள்ளி பெரும் வெற்றிபெற்ப கொடுத்த படகோட்டி உலகம் சுற்றும் வாலிபன்,சகலகலாவல்லவன், பாயும் புலி,திரிசூலத்தை பற்றி நீங்கள் ஏன் எழுதவில்லை. அந்த சினிமாக்கள்(ல்) அப்பொழுது பிறந்து அப்பொழுதே அடக்கம் செய்யபட்டவை.. பாடல்கள் மட்டும் உயிர் வாழ்கின்றன. அவள் அப்படித்தான் இன்னும் உயிர் வாழ்கிறது.. நல்ல கலை ஆயுள் அற்றது.

மைதீன் said...

@ வருகைக்கு நன்றி கார்த்திகேயன்.கண்டிப்பாக பாருங்கள்.எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.பெண்ணடிமைத்தனம்இன்றுவரை இருக்கிறது என்பது நாம் வெட்கம் கொள்ள வேண்டிய விஷயம்

மைதீன் said...

@முதல் வருகைக்கு நன்றி தமிழ் உதயம்.
@வருகைக்கு நன்றி அனானி.
ஒரு கலைஞன் கொண்டாடப் படவேண்டிய நேரத்தில் கொண்டாடினால், அந்த உற்சாகத்தின் மூலம் இன்னும் சிறந்த படைப்புகள் உலகத்திற்கு கிடைத்திருக்கும்.அந்த வருத்தம் எனக்கு நிறைய இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் தமிழின் மிகச் சிறந்த படங்களில் முதலிடத்தில் நான் வைத்திருக்கும் படமும் கூட

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே!இப்படம் ஒரு தீபாவளி திருநாளில் வெளியாகியது.இதோடு கமலின் சிகப்புரோஜாக்கள்,மனிதரில் இத்தனை நிறங்களா?ஆகிய மூன்று படங்கள் ரீலிசாகின,சிகப்புரோஜாக்கள் வெள்ளிவிழா கண்டது.அவள் அப்படித்தான் 100 நாட்கள் ஒடியது.ம.இ.நிறங்கள் மட்டும் தோல்வி கண்டது.ருத்ரையா இதன் பிறகு கிராமத்து அத்தியாயங்கள் என்ற தோல்விப்படம் கொடுத்துவிட்டு காணாமல் போய் விட்டார்.மகத்தான கலைஞன் ருத்ரையா.

காதர் அலி said...

தலைவா'',சினிமா விமர்சனத்தின் சிங்கம் ''என உங்களுக்கு பட்டம் வழங்குகிறேன் .நிறைவான விமர்சனம் .மனசு சந்தோசமா இருக்கு.நன்றி.

மைதீன் said...

@வருகைக்கு நன்றி உலக சினிமா ரசிகன் நான் அறியாத விசயங்களை அளித்திருக்கிறீர்கள் மிக நன்றி.

மைதீன் said...

@வருகைக்கு நன்றி காதர்பட்டம் கொடுக்கும் அளவு நான் வளரவில்லை. உங்கள் அன்புக்கு நன்றி.

அமுதா கிருஷ்ணா said...

இப்பவும் விஜய், ராஜ் சேனலில் போடும் போது நான் தவறாமல் பார்க்கும் ஒரு அருமையான படம்.

மைதீன் said...

@முதல் வருகைக்கு நன்றி அமுதாகிருஷ்ணா

ismailmohemed said...

நல்ல விமர்சனம் . இன்னும் எதிர்பார்க்கின்றேன்

Related Posts Plugin for WordPress, Blogger...