Monday, January 24, 2011

எதிர்காலத்தில் உணவுக்கு பஞ்சம் வருமா?


பத்துவருடங்களுக்கு முன்பு வரை நான் வாழ்ந்த ஊருக்கு தற்போது செல்ல நேர்ந்தது. ஊர் நிறைய மாறியிருந்தது .இது நான் எதிர்பார்த்ததுதான் இருந்தாலும் ,நான்புழங்கிய இடங்களுக்கு சென்றேன். மிகப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது நான் நினைத்ததைவிட அபார வளர்ச்சி கண்டிருந்தது. ஊருக்கு வெளியே கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை போர்வை போர்த்தியது போலிருந்த வயல் வெளிகள்,எனக்கு நீச்சல் கற்று தந்த கிணறுகள் எதுவும் அங்கில்லை.நானும் தேடாத இடமில்லை ( வடிவேலு போல் கிணறு காணவில்லை என்று காவல்துறையில் புகார் ஒன்றுதான் கொடுக்கவில்லை ) அவை இருந்த இடத்தில் எல்லாம் வீடுகள்! வீடுகள்! வீடுகள்!. இருக்கிற கடவுள்கள் அத்தனை பேர் பெயரிலும் நகர்கள். வயல் என்ன மருந்துக்கு ஒரு செடி கூட அங்கு இல்லை.ஊரின் அபார வளர்ச்சி கண்டு ஆனந்தமா? அழுகையா? தெரியவில்லை கண்ணில் நீர் முட்டிக்கொண்டு வந்தது .

எத்தனையோ ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்த வயல்கள் (விஜயகாந்த் போல் புள்ளி விபரம் தெரியவில்லையே சே.. ) எத்தனை ஆயிரம் பேருக்கு உணவளித்துக்கொண்டிருந்திருக்கும் .காலம் காலமாக மனிதர்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்துகொண்டிருந்த நிலங்கள் மனிதனின் பண ஆசையால் புல் கூட முளைக்க முடியாத நிலமாகிவிட்டது .இந்த ஊரில் மட்டும் இல்லாமல் எல்லா ஊரிலும் இந்த மாதிரி விளை நிலங்கள் வீட்டு மனைகளாகிக்கொண்டுதான் இருக்கிறது என்ற உண்மையே கிலியூட்டியது. இப்படியே போய்க்கொண்டிருந்தால் நம் சந்ததிக்கு சாப்பாட்டுக்கு வழி? அங்கு வீடு கட்டியவர்களின் முகத்தில் நாமும் வீடு கட்டிவிட்டோம் என்ற பெருமிதமும்,பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்துவிட்டோம் என்கிற நிம்மதியும் இருந்திருக்கும் போல ஆனால்,எனக்கென்னவோ வரும் சந்ததிக்கு உணவுக்கான பஞ்சத்துக்கு வித்திடுவதை போல தோன்றியது.ஆதங்கத்துடன் நண்பர்களிடத்தில் விவாதித்தேன் நிறைய விஷயங்கள் அலசப்பட்டது .அவை எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது இதை தடுப்பதற்கு என்ன வழி? ஏன் இந்த விவசாயிகள் எல்லாம் நிலத்தை விற்கிறார்கள் ? இயற்கை என்று காரணம் சொல்ல முடியாது வற்றாத குளம் அருகிலிருக்கிறது.(எல்லா இடத்திலும் அப்படியில்லை அது வேறு விஷயம்)

விவசாயி தான் உற்பத்தி செய்த பொருளுக்கு அவன் விலை வைக்க முடிவதில்லை யாரோ விலை நிர்ணயம் செய்ய வேண்டிஉள்ளது. அதனால் போட்ட முதலும் போய், உழைப்பும் போய் கடனாளியாகிறான்.இதில் ஆட்கள் பற்றாக்குறை வேறு, வயல் வேலை செய்ய யாரும் இப்போது தயாராக இல்லை.அது நல்ல தொழில் என்று யாரும் அங்கீகரிப்பதில்லை .

"விவசாயம் நாட்டின் முதுகெலும்பு " "விவசாயி சேற்றில் கால் வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது " என்று வசனம் வேண்டுமானால் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால், ஒரு விவசாயியை யாரும் இங்கு மதிப்பதற்கு தயாராக இல்லை.

எல்லோரும் தன பிள்ளைகளை டாக்டர்,எஞ்சினியர் ,வக்கீல்,தொழிலதிபர்,என்றுதான் உருவாக்க நினைக்கிறார்கள் ஏன் ஒரு கம்பெனியில் அடிமட்ட வேலைக்கு அனுப்பக்கூட தயாராயிருக்கிறார்கள் ஆனால், ஒரு விவசாயம் பார்ப்பவனாக நினைத்துக்கூட பார்ப்பதில்லை. ஏன் ஒரு விவசாயிக்கே கூட அந்த எண்ணமில்லை.காரணம், தனக்கு நேரும் அவமரியாதை தன் பிள்ளைகளுக்கு நேர வேண்டாம் கௌரவத்தோடு வாழட்டும் என்ற நினைப்பில் .ஆக,விவசாயம் பார்ப்பவன் கேவலமானவன் என்ற நிலை.
இது எப்படி உருவாகிறது? பொதுமக்களாகிய நாம் விவசாயிகளுக்கு கொடுக்கும் மரியாதை அப்படிப்பட்டது. வங்கிகளில்,அரசாங்க அலுவலகங்களில் ,பொது இடங்களில் அவர்களை நடத்தும் விதம் எல்லாம் நாம் அறிந்ததே!

மேலை நாட்டு விவசாயிகளை பார்த்தீர்கள் என்றால்,எல்லாவித வசதிகளோடும் இருப்பார்கள் அவர்கள் நாட்டில் மிக மரியாதையாக நடத்தப்படுவார்கள் விளைகின்ற பொருளுக்கு விலை நிர்ணயம் செய்பவர்களாக இருப்பார்கள்,முக்கியமாக படித்தவர்களாயிருப்பார்கள்.


இன்று வெங்காயம்,தக்காளி ,அரிசி என்று விவசாயப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவு இருக்கிறது .அப்படிப் பார்த்தால் விவசாயியின் வசதி வாய்ப்பு பெருகி இருக்க வேண்டும்.ஆனால்,அவன் நிலை தற்கொலை செய்யும் அளவிற்கு இருக்கிறது.அவன் அறியாமையை இடைத்தரகர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.அதைத் தடுக்க படித்தவர்கள் விவசாயத்திற்கு வரவேண்டும். நமது அரசாங்கம் விவசாயிகளுக்கு செய்யும் கொடுமை அளவிட முடியாதது.நம் நாட்டில் விவசாயத்துறையில் தன்னிறைவு காணாமல் இறக்குமதி செய்வதிலேயே குறியாக இருக்கிறது!

சமீபத்தில் நான் நேரில் கண்டது; இங்கு வேலூருக்கு அருகில் ஒரு இடத்தில் விளை நிலம் வீட்டு மனையாக்கப்பட்டு ரியல் எஸ்டேட் தொழில் சரிவால் விற்பனை ஆகாமல் இருந்தது. சில நாட்கள் கழித்து அந்த வழியாக செல்ல நேரிட்டது அப்போது அந்த நிலத்தை பார்த்தால், கரும்பு பயிரிடப்பட்டிருந்தது. இது போல் நாம் புறக்கணிக்கும்போது நிலை மாறும் என்ற உண்மை வெளியானது.விவசாயம் மட்டும் என்றில்லை எல்லா தொழில்களிலுமே ஏற்ற இறக்கங்கள் உண்டு அதற்காக எல்லோரும் தொழிலை விட்டு ஓடுவதில்லை மாறாக அதை லாபகரமாக மாற்றுவதற்கு முயற்சிப்பார்கள். ஆனால் விவசாயத்தொழில் மட்டுமே அழிந்துகொண்டே வருகிறது. நாம் நம் சந்ததிகளுக்கு பசியும், பட்டினியுமா விட்டுச் செல்லப்போகிறோம்? யோசியுங்கள்.

விளை நிலங்கள் வீட்டு மனையாகும்போது உடனே வாங்கி குவிக்காமல் புறக்கணித்தாலே நம் சந்ததிகளின் உணவுப்பற்றாக்குறையை நீக்கிவிடலாம்.உழவன் நமக்கு உணவளிக்கும் அன்னையைப்போன்றவன் என்ற எண்ணம் நமெக்கெல்லாம் உதித்து அவனை மதித்தாலே நாம் விவசாயத்துக்கு செய்யும் பெரிய மரியாதை.உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் .

பிடித்திருந்தால் ஓட்டும், பின்னூட்டமும் இட்டு என்னை ஊக்கப்படுத்துங்கள்.நன்றி!!!
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...