Wednesday, March 30, 2011

தேர்தல் என்றாலே....

என் சின்ன வயதிலிருந்து நிறைய தேர்தல்கள் என்னை கடந்து சென்றிருக்கின்றன. தேர்தல் என்றாலே திருவிழா கோலம்தான் நான் அதிகம் பார்த்தது. ஊரில் ஒரு சுவர் பாக்கியில்லாமல் விளம்பரம் செய்யப்பட்டிருக்கும். தெருக்கள் எங்கும் தோரணமும், கொடிகளும் சுவரொட்டிகளும் நிறைந்து காணப்படும். வாகனங்களில் ஒலி பெருக்கியை அலறவிட்டு துண்டு பிரசுரங்களை பறக்க விடுவார்கள். சிறுவர்கள் கூட்டம் அதை பொறுக்க பின்னாடியே ஓடிக்கொண்டு இருப்பார்கள். தலைவர்களும்,நடிகர்களும் மக்களை சந்திப்பதற்கு வீடு தேடி வருவார்கள். (தேர்தலுக்குப் பிறகு வெற்றி பெற்ற வேட்பாளர் கூட எட்டிப் பார்க்க மாட்டார் அது வேறு விஷயம்) ஆனால், இன்று அதற்க்கெல்லாம் தடா. ஊரெங்கும் பளிச்சென்றும், வெறிச்சோடியும் காணப் படுகிறது. ஒரு இருபது வருடங்கள் "கோமா" விலிருந்து நினைவு திரும்பிய ஒருவனை , தமிழகத்தில் தேர்தல் என்ற செய்தியோடு ஊரை சுற்றிக் காட்டினால், அவன் அதிர்ந்து மீண்டும் "கோமா" நிலைக்கு திரும்புவது நிச்சயம். இந்த மாற்றங்கள் எப்போது உருவானது என்று பார்த்தால்......டி .என். சேஷன் என்று அழைக்கப் படுகிற திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.1990 லிருந்து 1996 வரை தேர்தல் கமிஷன் தலைவராக பொறுப்பேற்றிருந்தார் . தேர்தல் கமிஷன் என்றால் என்ன? அதன் எல்லைகள், அதிகாரங்கள் என்ன? என்பதை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார்.இதற்கு அவர் எவ்வளவு சவால்களை சந்தித்து இருப்பார் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. பின்னர் ஜனாதிபதி பதவிக்கு கூட போட்டியிட்டார். ஆனால், தோற்கடிக்க பட்டார் . அரசியல் வாதிகள் பயந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். ஜனாதிபதியை பொம்மை போல வைத்திருக்கும் இடத்தில் இவர்போன்றவர்கள் நுழைந்து பதவி பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வந்துவிட்டால்...என்னாவது என்ற நல்ல எண்ணத்தில். அதற்க்கு பிறகு வந்த தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் பணியை திறம்பட செய்வதால் இன்று இப்படி ஒரு மாற்றம்.என்று நினைக்கிறேன்.

இன்று தேர்தலில் பங்கு பெரும் கட்சிகள் எத்தனை என்று கணக்கிலிடவே முடியவில்லை . ஜாதிக்கு ஒரு கட்சி, இல்லை,இல்லை ஜாதிக்குள் இருக்கும் பிரிவுக்கொரு கட்சி முளைகிறது . நான்கு படம் நடித்து பிரபலமாகி விட்டால் கட்சி. போததற்கு கொஞ்சம் பணமும், சில அடிமைகளும் சிக்கி விட்டால், கட்சி. அடித்த கொள்ளையில் பங்கு பிரிக்கும் போது பிரச்சினை வந்தால் உடனே கட்சி. இப்படி ஆரம்பித்து,ஆரம்பித்து கட்சிகளின் கணக்கே தெரியவில்லை. இப்படியே போனால், அடுத்த தேர்தலில் பிரதான கட்சிகளான தி.மு.க. , அ.தி.மு.க. 30, 40,
இடங்களில் தான் போட்டியிடும் போல. இதை கட்டுப் படுத்துவதற்கு என்ன வழி என்பதை யார் வந்து சொல்வார்கள் என்று தெரியவில்லை?
நண்பர்களே என் எழுத்து பிடித்திருந்தால் ஓட்டும், பின்னூட்டமும் தந்து ஆதரவு தாருங்கள்.நன்றி!
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Saturday, March 26, 2011

சுப்புலட்சுமியும், அவள் மூக்கும்

எங்கள் வகுப்பில் ஆண்கள் 26 பேர், பெண்கள் 18 பேர் , பள்ளியின் எல்லா வகுப்பிலும் பெண்கள் குறைவாகத்தான் படித்துக் கொண்டிருந்தனர் அப்போது. அந்த 18 பேரில் 10 பேர் மட்டுமே ஆண்களின் கவனத்துக்குரியவர்கள். ஏனென்றால், அவர்கள் அழகு நிறைந்தவர்கள். அதில் நான்கு பேர் சிவந்த நிறமுடையவர்கள்.சிவப்புத்தோல்தான் அழகு என்று யார் போதித்தார்கள்?, எதனால் வந்தது?, எப்படி? என்ற கேள்விகளெல்லாம் அப்போது எங்களுக்கு தெரியாது. படிப்பில் கூட சிறந்தவர்களாய் இருந்தார்கள்.தேர்வில் முதலிடம் பிடிப்பவர்களுக்குதான் "லீடர் " பதவி.அதற்காக மாணவ மாணவியர்க்கு போட்டியே நடக்கும் . ஆண்,பெண் என்ற அகங்காரம் அந்த வயதிலே ஆரம்பித்து விட்டது.ஆண் லீடராகி விட்டால் ஆசிரியர் இல்லாத போது பெண்களின் அத்தனை பேர் பெயரும் தண்டனைக்குரியவர்கள் பட்டியலில் போர்டில் இருக்கும்.பெண் லீடரானாலும் அதே.

எங்களுக்கு வரலாறு புவியியல்(தற்போது சமூக அறிவியல்) பாடம் நடத்துவதற்கு "சாலமன் " என்ற ஆசிரியர் வருவார்.அடர் கருப்பு நிறம் கொண்டவர்.வெண்மை நிற தலை முடியும்,மீசையும் உடையவர் .அவர் உடுத்தும் வேட்டி, சட்டையை விட அது வெளுப்பாக இருக்கும் .குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் சினிமாவில் வரும் "பெரிய கறுப்புத் தேவர்" என்ற நடிகரை சொல்லலாம். அவர் என்னவிதமான குணம் கொண்டவர் என்று கண்டுபிடிக்க முடியாது. ஒருநாள் சீறுவார்,ஒருநாள் மகிழ்ச்சியாக பேசுவார், ஒருநாள் அமைதியாக பாடம் நடத்துவார். வகுப்பில் கேள்விகள் கேட்கும் போது பெண்கள் பகுதியில் மட்டுமே கேட்பார்.தண்டனைகளும் அவர்களுக்கு மட்டும்தான்.

அந்த அழகுப் பெண்கள் மத்தியில் சுப்புலட்சுமி என்ற பெண் தனித்து தெரியும். கிளி போன்ற வளைந்த மூக்கே அவளின் அழகை தனித்து காட்டும் .படிப்பிலும் கெட்டி எனக்கு அவளை மிகவும் பிடிக்கும்.சந்தேகம் என்ற பெயரில் நான் அவளிடம் நட்பாக இருக்க முயற்சித்ததுண்டு . ஆசிரியரின் கேள்விகள் எப்போதும் முதலில் அவளை நோக்கியே செல்லும்.பதில் தவறாக இருந்தால் அவளின் மூக்கை பிடித்து திருகுவார். வலியில் துடிப்பாள். சரியான பதிலாக இருந்தாலும், அவள் மூக்கு செல்லமாக திருகப்படும். அப்போதும் வலியால் முனகுவாள்.சிவந்த அவள் மூக்கு மேலும் சிவக்கும் .எனக்கு கோபம் அதிகமாகும். என் மனதில் ஹீரோ ஒருவன் எழுந்து முஷ்டியை மடக்கி வாத்தியாரின் மூக்கை பார்த்து ரத்தம் வரும் வரை குத்துவான் .நிஜத்தில் நடத்த முடியாததெல்லாம் நடத்துவான். நான் ரசிக்கின்ற மூக்கு வாத்தியாருக்கு பிடிக்கவில்லையா? ஆனால்,பிடித்திருக்கிறது என்று சொல்லித்தான் திருகுவார். எனினும் ஏன் என்று தெரியவில்லை? .

பிறகு குடும்ப சூழலால் முழு வகுப்பும் படிக்க முடியாமல், வேறு ஊரில் படிக்க வேண்டியதாயிற்று . சில வருடங்கள் கழித்து உடன் படித்த நண்பன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது. பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். சுப்புலட்சுமியை பற்றி தெரிந்து கொள்ள ஆவல் இருந்தும் உள்ளே ஏதோ ஒன்று தடுத்தது. பின் வாத்தியாரைப் பற்றி விசாரித்தேன். அவன் சொன்னதும் அதிர்ந்தேன். ""சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது ரத்த அழுத்தத்தால் தலை சுற்றி கீழே விழுந்து இறந்து போனார் . மூக்கில் அடிபட்டு "


நண்பர்களே என் எழுத்து பிடித்திருந்தால் ஓட்டும், பின்னூட்டமும் இட்டு எனக்கு ஆதரவு தாருங்கள். நன்றி!
.
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, March 24, 2011

என்றுதான் விடியுமோ?

தமிழ்நாட்டில் மின்வெட்டு இரண்டுமணி நேரத்தில் இருந்து இப்போது 3 மணி நேரமாகிவிட்டது. இதில் அறிவிப்பில்லாமல் சிறிது சிறிதாக 2 மணிநேரம் மொத்தம் 5 மணி நேரங்கள் மின் வசதி இல்லை. கோடை ஆரம்பிக்கும்போதே இப்படியென்றால் இந்த முழு கோடையையும் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.மின்வெட்டு நேரம் இன்னும் அதிகரிக்கும் போல் தெரிகிறது. இதில் இரவு சிறிது நேரம் மின்வெட்டு ஆகிவிடுவதால் ரொம்பக் கொடுமை.குழந்தைகள் படும் பாடு சொல்லி மாளாது. தேர்தல் நேரமே இப்படியென்றால், தேர்தல் முடிந்து பதவிக்கு வந்தபின் மின்வெட்டு பிரச்சினை இன்னும் அதிகமாகுபோல் எனக்கு தோன்றுகிறது.

உணவு,உடை,உறைவிடம் போலவே மின்சாரம் மனிதனின் அத்தியாவசியம் ஆகிவிட்டது. இல்லாமல் முடியாது என்ற சூழல் உருவாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் மின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. புதிது புதிதாக வீடுகளும், தொழிற்சாலைகளும்,மின்சாதன கண்டுபிடிப்புகளும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. குடிசை முதற்கொண்டு எல்லா வீட்டிலும் அரிசி, பருப்பு இருக்கின்றதோ இல்லையோ மின்சாதனப் பெருட்கள் கட்டாயம் இடம் பெற்று இருக்கிறது .இதில் வீட்டில் இருக்கிற டி.வி. போதாதென்று அரசாங்கம் வேறு இலவசமாய் கொடுத்திருக்கிறது.

ஆளும் ஆட்சியாளர்களுக்கு தொலை நோக்குப் பார்வை என்பதே கிடையாது போல் தெரிகிறது . தன குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத்தை உத்தேசித்து முன்கூட்டியே முடிவெடுக்கும் தலைவர்கள் பொதுமக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திப்பதே இல்லை. இலவசங்களை கொடுத்து செய்த தப்புகளை மறக்கடித்து விடலாம் என்று அசிங்கமான அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டுகளுக்காக அவர்கள் நடத்தும் நாடங்கள் மிகுந்த கோபத்தை வரவழைக்கின்றன. கிரைண்டர்,மிக்சி, என எல்லா இலவசங்களும் மின்சாதனப் பொருட்கள் .ஆனால்,மின்சாரம் மட்டும் கிடையாது.

காமராஜர்,கக்கன், அண்ணா போன்ற பெரும் தலைவர்கள் மனசாட்சி படியும் மக்களின் நன் மதிப்பை பெற்றும் ஆட்சி செய்தார்கள் . பொதுவாக அரசுப் பணியில் இருப்பவர்கள்,மக்களின் பிரதிநிதிகள் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவர்கள் மதம்,இறைநம்பிக்கை எல்லாவற்றையும் பகிரங்கப் படுத்தக் கூடாது . மனதிற்குள் தான் வைக்கவேண்டும்.ஆனால் இங்கு சாமியார்களிடத்தில் ஓடுவதும், ஜாதி ஓட்டுக்களுக்காக ரௌடிகளை வளர்த்துவிடுவதும், மத தளங்களுக்கு சென்று அந்த சடங்குகளில் கலந்து கொள்வதும் அதை விளம்பரப் படுத்துவதும் என்று மோசமான முன்னுதாரணங்களை ஏற்ப்படுத்துகிறார்கள்.மக்களின் அபிமானம் பெற்ற தலைவர்கள் என்று இப்போது யாரும் இல்லை.

"ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்" என்று கூறுகிறார் கலைஞர். கஜானாவைக் காலி பண்ணிக்கொண்டிருந்தால் ஏழைகள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள்.பசித்த ஒருவனுக்கு உணவு அளித்து பெருமை தேடுவதை விட அடுத்த வேளை உணவுக்கும் அவனே தேடிக்கொள்ளுமளவு அவனை உருவாக்குபவனே சிறந்த மனிதன்.என்று எங்கோ படித்த நினைவு.நண்பர்களே! என் எழுத்து பிடித்திருந்தால் ஓட்டும்,பின்னூட்டமும் இட்டு எனக்கு ஆதரவு தாருங்கள்.நன்றி!
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, March 22, 2011

அவள் அப்படித்தான்-என் பார்வையில்தமிழகத்தில் செயற்கைகோள் தொலைகாட்சிகளில் நாடகங்கள் பிரபலமாகும் வரை தமிழ் திரையுலகமே பெண்களால்தான் வாழ்ந்து கொண்டிருந்தது. சுவரொட்டிகளில் "தாய்க்குலம் போற்றும்" "தாய்மார்கள் பேராதரவுடன்" என்றுதான் விளம்பரமே செய்வார்கள். அந்த அளவுக்கு பெண்களை நோக்கிதான் படங்கள் தயாரிக்கப்பட்டன.ஆனால், பெண்களுக்கான,பெண்களைப்பற்றிய படம் என்று பார்த்தால் மிக அரிதாகவே உள்ளது.ஏன்?இதுவரை வந்த பெண் இயக்குனர்கள் கூட பெண்கள் மீதான சமூகப் பார்வையை பதிவு செய்ததில்லை.

1978ல் வெளிவந்த "அவள் அப்படித்தான்" என்ற திரைப்படம் பெண்கள் மீதான சமூகப் பார்வையை அழுத்தமாக பதிவு செய்தது. ஆனால்,அந்த படம் புறக்கணிக்கப் பட்டது.ரஜினி,கமல்,ஸ்ரீப்ரியா என்று முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தும் வெற்றியை தரவில்லை. பெண்கள் இந்தப் படத்தை கொண்டாடியிருந்தால், இந்தப் படம் பிரபலமாகி இருக்கும். ஒரு படம் வெற்றியடைந்தால், அதுபோல் கதையுள்ள நிறைய படம் வருகின்ற சூழலில் ,இது போன்ற சமூகப் பார்வை கொண்ட படங்கள் வந்து பெண்களைப் பற்றி ஆண்கள் புரிந்துகொள்ள சந்தர்ப்பங்கள் வாய்த்திருக்கும்.என்பது என் எண்ணம். 33 வருடங்களுக்கு முன்னாள் வந்த இத்திரைப்படம் இன்றைய சூழலுக்கும் வெகுவாகப் பொருந்துகிறது .சமூகத்தில் இன்று வரை பெண்கள் நிலை மாறாமல் இருப்பதை இது காட்டுகிறது .
அவள் அப்படித்தான் கதை

அருண்(கமல்) ஆவணப் படங்கள் எடுப்பதில் ஆர்வம் உள்ளவன்.சமுதாயத்தில் பெண்களின் நிலை பற்றிய"முழு நிலவில் பாதி" என்ற ஆவணப் படத்தின் மாதிரியை, விளம்பர படங்கள் எடுக்கும் நிறுவனத்தை நடத்தும் தன நண்பனுக்கு(ரஜினி ) போட்டு காண்பிக்கிறான்.அங்கு மஞ்சு (ஸ்ரீப்ரியா) என்ற பெண்ணை கலை இயக்குனர் என்று சொல்லி நண்பன் அறிமுகப்படுத்துகிறான்.தான் எடுக்கும் ஆவணப் படத்திற்கு உதவுமாறு கேட்கிறான். அவளும் சரி என்று கூறுகிறாள். போகப்போக அவளின் குதர்க்கமான பேச்சும்,ஆண்களின் மீதான வெறுப்பும் அவனை யோசிக்க வைக்கிறது.பின்பு அவளின் மூலமாகவே அவளின் கடந்த கால வாழ்க்கை அறிகிறான்.அவள் தாயின் கள்ளக் காதல், பின்பு கல்லூரியில் படிக்கும்போது காதலித்தவன் ஏமாற்றியது,பின்பு வந்த காதலனும் அனுபவித்துவிட்டு ஏமாற்றியது.அதனால் ஆண்கள் மீதான வெறுப்பை அவன் அறிகிறான் அனுதாபம் கொள்கிறான். காதல் பிறக்கிறது அதை அவளிடம் கூறும்போது அவள் அதை நிராகரிக்கிறாள். வெறுப்புற்று திரும்புகிறான். பின்பு அவளுக்கும் காதல் பிறக்கிறது. ஆனால்,அதை கூறுவதற்குள் அவனின் பெற்றோர் நிச்சயித்த பெண்ணை அவன் திருமணம் செய்து கொள்கிறான்.மூன்று முறை இறந்த அவள் மறுபடியும் இறக்கிறாள் மீண்டும் பிறப்பாள் இறப்பாள் அவள் அப்படித்தான்..என்கிறது கதை.கதாநாயகிகளை பத்தினி தெய்வங்களாய் காட்டிகொண்டிருந்த காலகட்டத்தில் இருவரை காதலித்து ஒருவனிடம் கற்பிழந்து,மீண்டும் ஒருவனை காதலிக்க நினைக்கும் பெண் ,கள்ளக்காதல் புரியும் பெண்ணின் மகள். இது போல கதை புதுமையிலும் புதுமை.
இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியாவின் பாத்திரம் மிக முக்கியமானது, அவரைத்தவிர இந்தப் பாத்திரத்திற்கு வேறு யாரையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை அவ்வளவு கச்சிதம். போலி வேடதாரிகளை கண்டு சீறுவது ,சமூக சேவகியை பேட்டி காணும்போது அவர் "மேக்கப் போட்டுக்கணுமா?" என்று கேக்கும்போது "போட்டுக்கணும் நீங்க வழக்கமா போட்டுக்குவீங்களே சொசைட்டி மேக்கப் அது போதும்" என்று கூறுவது, சிவச்சந்திரன் காதலித்து படுக்கையை பகிர்ந்து கொண்டு பின் தங்கச்சி மாதிரி என்று சொன்னடவுடன் அதிர்ந்து போவது, கமல் திருமணம் முடித்து வரும் போது அவர் மனைவியிடம் "பெண் சுதந்திரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்றதும் "எனக்கு அது பற்றி தெரியாதே!"என்று வெகுளியாய் உரைக்கும் போது "அதனால் தான் நீ சந்தோசமாய் இருக்கிறாய்"என்று கூறும் போதும் வசனமும், நடிப்பும் மிகப் பிரமாதம்.

கமலுக்கு இதில் ஜென்டில்மென் கதாபாத்திரம், பெண்ணுரிமை பேசுவதும் ,கதாநாயகி கதை கேட்டு அனுதாபம் கொள்வதும், பின் காதல் கொள்வதும் என்று அவர் பணியை மிக சிறப்பாக செய்துள்ளார்.நெற்றி நிறைய விபூதி கையில் மதுக்கிண்ணம கொண்ட ஆணாதிக்கவாதி ரஜினியின் கதா பாத்திரம்.பெண்கள் சொந்தக் காலில் நிற்க கூடாது ,பெண்கள் போகப்பொருள் ,அவர்கள் முன்னேற்றம் தவறு என்பவர். இவரைப் போல் இன்றும் நாம் நம்மில் நிறைய பேரைக் காணலாம்.

இசை இளைய ராஜா பாடல்கள் அத்தனையும் முத்துக்கள்.உறவுகள் தொடர்கதை பாடல் எவ்வளவு கேட்டாலும் சலிக்காத பாடல் முற்றிலும் பியானோ வை மட்டுமே வைத்து இசைத்த புதுமையான பாடல் .பன்னீர் புஷ்பங்களே என்ற பாடலை முதன் முறையாக கமலஹாசன் சொந்த குரலில் பாடியது.

இந்தப் படத்தின் இயக்குனர் ருத்ரையா. தயாரிப்பும் இவரே.திரைப் படக் கல்லூரியிலிருந்து வந்தவர். மனித உணர்வுகளை வைத்து அற்புதமாக ஒரு காவியமே படைத்துள்ளார்.தீர்வு சொல்லாமல், கருத்து சொல்லாமல். பார்வையாளனை சிந்திக்க வைத்திருக்கும் பாங்கு ஒன்றே போதும் இவரை உயரத்தில் வைக்க.இவரை தமிழ் சினிமா கண்டு கொள்ளாமல் விட்டது.மிகப் பெரிய கொடுமை.இது தமிழ் சினிமாவின் மிக முக்கியாமானதொரு படம். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் .நண்பர்களே! என் எழுத்து பிடித்திருந்தால் ஓட்டும்,பின்னூட்டமும் இட்டு எனக்கு ஆதரவு தாருங்கள்.நன்றி!

சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Sunday, March 13, 2011

ஆசிரியரின் வினோதமான பழக்கம்

நான் ஆறாம் வகுப்பு பாளையங்கோட்டையில் உள்ள c.m.s. மேரி ஆர்டன் நடுநிலைப்பள்ளியில் படித்தேன். அந்த ஒரு வகுப்பு மட்டுமே அங்கு படிக்க நேர்ந்தது.ஆண்,பெண் இரு பாலரும் படிக்கும் பள்ளியது.எங்கள் வகுப்பாசிரியர் ஒரு கிறிஸ்துவ பெண்மணி. கிறிஸ்துவிடத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். எங்களுக்கு பைபிளை அதிகமாக போதித்து அதன் படி வாழ கற்றுக்கொடுப்பார்.இன்னும் சொல்லப்போனால், "வேத பாடம்" என்றொரு வகுப்பும், அதற்க்கு தேர்வும், மதிப்பெண்களும் கூட அந்தப்பள்ளியில் உண்டு.அங்கு படித்த நாட்களில் நான் ஒரு கிறிஸ்தவனாகவே வாழ்ந்தேன் என்று கூட சொல்லலாம்.நான் மட்டுமின்றி நண்ப, நண்பிகளும் கூட அப்படித்தான் வாழ்ந்ததாக எனக்கு நினைவு.

அவர் எங்களுக்கு அடிக்கடி தேர்வுகள் வைப்பார். பள்ளி தரும் தர அட்டைகளை(rank card)கூட அவர்தான் நிர்வகிப்பார். மாணவர்களை தரம் பிரிப்பதில் அவர் ஒரு முறை ஒன்று வைத்திருந்தார். நான் அறிந்தவரை எல்லா பள்ளிகளிலும் மாணவர்களின் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர்களின் தரம் பிரிக்கப் படும். ஆனால்,இந்த ஆசிரியரின் பார்வை மாறுபட்டு இருக்கும். ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களையே முன்னிருத்துவார்.

உதாரணமாக, நான் நான்கு பாடங்களில் 200 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 40 மதிப்பெண்களும் சேர்த்து 240 வாங்கியிருந்தேன். ஆனால், என் நண்பன் நான்கு பாடங்களில் 240 ஆங்கிலத்தில் 35 என்று மொத்தம் 275 மதிப்பெண்கள் பெற்றிருந்தான். எனக்கு ஏழாம் இடமும், அவனுக்கு பதினோராம் இடமும் தரமாக நிர்ணயித்து இருந்தார். எனக்கு இது விநோதமாக பட்டாலும் ( பட், அந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது) இங்கு அப்படித்தான் போல என்று நினைத்துவிட்டேன். ஆனால், இன்று வரை எந்தப் பள்ளியிலும் அப்படி ஒரு முறை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஏன் அந்த ஆசிரியர் மட்டும் அப்படி? அந்த ஆசிரியரை யாரும் கண்டுகொள்ளாதது ஏன்? வேறு யாரும் இதுபோல உண்டா? என்கிற என் கேள்விக்கு இன்று வரை பதிலில்லை.

நண்பர்களே! இந்த நடைமுறை பற்றி ஏதேனும் தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் எனக்கு விளக்குங்கள்.நன்றி!

டிஸ்கி: அந்தப் பள்ளியில் மற்ற வகுப்பில் அந்த பழக்கம் கிடையாது. நண்பன் என் எதிரில் அவர்கள் வீட்டில் அடி வாங்கினான்.
நண்பர்களே! என் எழுத்து பிடித்திருந்தால் ஓட்டும்,பின்னூட்டமும் இட்டு எனக்கு ஆதரவு தாருங்கள்.நன்றி!
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, March 3, 2011

கதை, வசனம், நடிகர்கள் இல்லாத வித்தியாசமான திரைப்படம்

BARAKA (1992)"இயற்கை" இந்த சொல் சாதாரணமானது என்றாலும் இந்த சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்களுக்கு கணக்கில்லை. உலகில் எந்த உயிரினமும் இயற்கையின் நியதிப்படிதான் வாழ்கிறது. மனிதனைத் தவிர,இயற்கையின் நியதிப்படி வாழ்ந்து கொண்டிருந்தவன் இப்பொழுது இயந்திரங்களின் நியதிப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறான். இயற்கை அவனுக்கு ஆறாம் அறிவு வழங்கியதால்...மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் இயற்கை காட்சிகளையோ, மீன் தொட்டிகளையோ,அல்லது ,இயற்கை சூழ்ந்த இடங்களில் நாம் நின்று பார்த்தால் இறுக்கம் களைந்து மனம் புத்துணர்ச்சி அடைகிறது. அப்போது புரிந்து விடும் இயற்கை எவ்வளவு முக்கியம் என்று.


இனி நாம் baraka திரைப்படத்தை பார்க்கலாம்.
உலக சினிமா,உலக சினிமா என்று கூறுகிறோம் உண்மையில் இதுதான் உலகசினிமா. ஆறு கண்டங்களில் கிட்ட தட்ட முப்பது நாடுகளை சுற்றி எடுக்கப்பட்டுள்ளது. படம் உலகத்தை சுற்றி வந்த உணர்வு ஏற்ப்படுத்தினாலும், உண்மையிலே நாம் உலகை சுற்றி வந்தால் கூட இப்படி கோணங்களில் பார்த்திருக்க முடியாது.பயணக்கட்டுரை, டி.வி டாகுமெண்டரி போலல்லாமல் சொல்லப்படும் விதம் புதியது. கதை என்று ஒன்றில்லாவிட்டாலும் கூட மனம் கதை எழுத துவங்கிவிடுகிறது. இசை அதற்க்கு பெரிதும் துணை நிற்கிறது. இசை மட்டும் வைத்து கதை சொல்வது மிக அற்புதம்.

எல்லா நாட்டு மக்களின் வாழ்க்கையின் சகல பரிணாமங்களையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.பனிப் பிரதேசத்தின் குரங்கின் வாழ்விலிருந்து தொடங்கும் காமிரா பயணம் நேபாளம்,இஸ்ரேல்,திபெத் என்று உலகின் அனைத்து நாடுகளிலும் தங்கு தடையில்லாமல் தன் எல்லைகளை விரிவு படுத்திக்கொண்டு செல்கிறது.வானம்,கடல்,எரிமலை,நீர்நிலை,நகரம்,வனம் என்று அதன் பயணங்களின் தொலைவு மிக அதிகம்.நாம் பார்க்காத கோணத்தில். ஒரு பறவையைப்போல எந்த தடையும் இல்லாமல்.
காட்சிகள் மாறும்போது காமிரா எந்த கோணம்?, என்னவிதம்? என்று புரிய சில நிமிடங்கள் ஆகும். புரிந்ததும் பிரமிப்பில் வழி விரிகிறது.இந்த உலகம் எவ்வளவு அழகு என்பதை நமக்கு புரிய வைக்கிறது .இந்த அழகான இயற்கையை மனிதன் புரிந்து கொள்ள மறுப்பதையும் காட்டுகிறது. அவ்வளவு பெரிய காட்டில் ஒரு மரம் அறுக்கப்பட்டு சரியும் போது நம் மனம் பதறுவதை நம்மால் உணர முடியும்.


"மதம் இல்லையெனில் மனிதர்கள் இல்லை" என்பது போல மனிதர்கள் மதத்தின் உள்ளே முடங்கிக் கிடப்பதை பார்க்க முடிகிறது.இந்து,இஸ்லாம்,கிறிஸ்துவ,பௌத்த மதங்களின் எல்லா புனிதத் தலங்களுக்கும் காமிரா சென்று வருகிறது . அவர்களின் வேண்டுதல்களும்,சடங்குகளும் அவர்களின் பற்றுதல்களும் நமக்கு புரிகிறது.ஆப்ரிக்க பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையும் இயற்க்கை சார்ந்த வாழ்வும் நமக்கு நிறைய சேதி சொல்கிறது. நகரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதும் வருவதும்,எறும்புகள் போல காட்டும் விதம் நீங்கள் மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கும்.

இந்தியாவில் வாரணாசியில் பிணங்கள் எறிவதும், எரிந்து முடியாமலே இருக்கும்போது இன்னொரு பிணம் வந்தததும் அதை தள்ளி விட்டு இதை எரிய வைப்பதும், கங்கை நதியும் ,சடா முடி சாமியார்கள்,நகரங்களின் அன்றாடவாழ்க்கை,போக்குவரத்து நெரிசல்,இயந்திரத்தனமான வாழ்க்கை, பாதையோர கடைகள்,பாலங்கள் என காமிரா தொட்டு செல்லும் இடங்கள் ஏராளம்.


கடைசி பத்து நிமிடங்கள் நம்மை நிறைய யோசிக்க வைக்கிறது . நுகர்வு கலாசாரத்தின் விளைவாக சிகரெட்டு முதல் கம்ப்யூட்டர் பாகம்தயாரிப்பது வரை மனிதர்கள் இயந்திரத்தோடு வேலை செய்து இவர்களும் இயந்திரமாய் மாறிவிட்டதை காட்டுகிறது. மலை போல் குவிக்கப்பட்ட குப்பைகளிடையே கோழிகளைப் போல கிளறி கழிவு பொருட்கள் தேடும் குழந்தைகள்,பெண்கள்,மற்றும் ரோட்டோரத்தில் பசியால் வாடும் ஜீவன்களை பார்க்கும்போது இரண்டு லட்சம் கோடி அடித்தவர்களின் மீது கடும் கோபம் உண்டாக்கும். இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் மண்டையோடுகளும்,எழும்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டு , அதை துப்பாக்கி தாங்கிய காவலர்கள் பாதுகாப்பதும் ஆயிரம் சங்கதி சொல்லும்.கோழிப் பண்ணையில் குஞ்சுகள் உருவாகும் விதத்தையும், நகரத்தின் மனிதர்களின் வாழ்க்கை நிலையயும் ஒரு சேர காட்டும் காட்சி மிகச் சிறப்பானது.

படத்தின் எந்த ஒரு காட்சியும் நம்மை சந்தோசம் கொள்ளவோ, மகிழ்ச்சிப் படுத்தவோ செய்யாது.நிஜத்தை மட்டுமே உள்ளபடி காட்டும். நாம் பார்த்த,பார்க்காத மனிதர்களையும் ,சூழல்களையும் காட்சிப் படுத்தியிருப்பது இயக்குனரின் திறமையின் வெளிப்பாடு.

96 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் இயக்குனர், ron fricke படத்தின் ஒளிப்பதிவாளரும் இவரே! படக் குழுவினரின் உழைப்பு எவ்வளவு கடினம் என்பதை பார்க்கும் போதே உணர முடிகிறது. படம் பாருங்கள் பார்த்ததும் உங்களுக்கும் ஒரு பதிவு எழுத தோணும்.
திரைப் படங்களுக்கு மட்டுமல்ல, என் எழுத்துக்கும் விமர்சனங்கள் தேவை.ஆகவே, தங்கள் விமர்சனங்களை இங்கே தந்து என்னை அடையாளம் காட்டுங்கள். நன்றி!!!
சும்மா தமிழிலேயே எழுதுங்க
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...