Wednesday, March 30, 2011

தேர்தல் என்றாலே....

என் சின்ன வயதிலிருந்து நிறைய தேர்தல்கள் என்னை கடந்து சென்றிருக்கின்றன. தேர்தல் என்றாலே திருவிழா கோலம்தான் நான் அதிகம் பார்த்தது. ஊரில் ஒரு சுவர் பாக்கியில்லாமல் விளம்பரம் செய்யப்பட்டிருக்கும். தெருக்கள் எங்கும் தோரணமும், கொடிகளும் சுவரொட்டிகளும் நிறைந்து காணப்படும். வாகனங்களில் ஒலி பெருக்கியை அலறவிட்டு துண்டு பிரசுரங்களை பறக்க விடுவார்கள். சிறுவர்கள் கூட்டம் அதை பொறுக்க பின்னாடியே ஓடிக்கொண்டு இருப்பார்கள். தலைவர்களும்,நடிகர்களும் மக்களை சந்திப்பதற்கு வீடு தேடி வருவார்கள். (தேர்தலுக்குப் பிறகு வெற்றி பெற்ற வேட்பாளர் கூட எட்டிப் பார்க்க மாட்டார் அது வேறு விஷயம்) ஆனால், இன்று அதற்க்கெல்லாம் தடா. ஊரெங்கும் பளிச்சென்றும், வெறிச்சோடியும் காணப் படுகிறது. ஒரு இருபது வருடங்கள் "கோமா" விலிருந்து நினைவு திரும்பிய ஒருவனை , தமிழகத்தில் தேர்தல் என்ற செய்தியோடு ஊரை சுற்றிக் காட்டினால், அவன் அதிர்ந்து மீண்டும் "கோமா" நிலைக்கு திரும்புவது நிச்சயம். இந்த மாற்றங்கள் எப்போது உருவானது என்று பார்த்தால்......



டி .என். சேஷன் என்று அழைக்கப் படுகிற திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.1990 லிருந்து 1996 வரை தேர்தல் கமிஷன் தலைவராக பொறுப்பேற்றிருந்தார் . தேர்தல் கமிஷன் என்றால் என்ன? அதன் எல்லைகள், அதிகாரங்கள் என்ன? என்பதை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார்.இதற்கு அவர் எவ்வளவு சவால்களை சந்தித்து இருப்பார் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. பின்னர் ஜனாதிபதி பதவிக்கு கூட போட்டியிட்டார். ஆனால், தோற்கடிக்க பட்டார் . அரசியல் வாதிகள் பயந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். ஜனாதிபதியை பொம்மை போல வைத்திருக்கும் இடத்தில் இவர்போன்றவர்கள் நுழைந்து பதவி பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வந்துவிட்டால்...என்னாவது என்ற நல்ல எண்ணத்தில். அதற்க்கு பிறகு வந்த தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் பணியை திறம்பட செய்வதால் இன்று இப்படி ஒரு மாற்றம்.என்று நினைக்கிறேன்.

இன்று தேர்தலில் பங்கு பெரும் கட்சிகள் எத்தனை என்று கணக்கிலிடவே முடியவில்லை . ஜாதிக்கு ஒரு கட்சி, இல்லை,இல்லை ஜாதிக்குள் இருக்கும் பிரிவுக்கொரு கட்சி முளைகிறது . நான்கு படம் நடித்து பிரபலமாகி விட்டால் கட்சி. போததற்கு கொஞ்சம் பணமும், சில அடிமைகளும் சிக்கி விட்டால், கட்சி. அடித்த கொள்ளையில் பங்கு பிரிக்கும் போது பிரச்சினை வந்தால் உடனே கட்சி. இப்படி ஆரம்பித்து,ஆரம்பித்து கட்சிகளின் கணக்கே தெரியவில்லை. இப்படியே போனால், அடுத்த தேர்தலில் பிரதான கட்சிகளான தி.மு.க. , அ.தி.மு.க. 30, 40,
இடங்களில் தான் போட்டியிடும் போல. இதை கட்டுப் படுத்துவதற்கு என்ன வழி என்பதை யார் வந்து சொல்வார்கள் என்று தெரியவில்லை?




நண்பர்களே என் எழுத்து பிடித்திருந்தால் ஓட்டும், பின்னூட்டமும் தந்து ஆதரவு தாருங்கள்.நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...